கீழவெண்மணியில் அடக்குமுறை வெறியாட்டத்திற்கு 44 பேரை பலி கொடுத்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரைப்படி நெல் கூலியை உயர்த்திக் கேட்டுப் போராடிய விவசாய கூலிகள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தாலும், அதன் சுவடுகள் இன்னமும் அழியாமல் இருக்கின்றன.
நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் நிலச்சுவான்தார்கள் கட்டுப்பாட்டில் இருந்த காலக்கட்டம் அது. நிலத்தில் வியர்வை சிந்தி உழைத்த விவசாய தொழிலாளர்கள், அதற்கு கூலியாக நெல்லை பெற்றுச் செல்லும் நடைமுறை இருந்தது. அரைப்படி நெல்லை கூடுதலாக உயர்த்தி வழங்கக் கேட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் மீது அடக்குமுறை கட்டவிழித்து விடப்பட்டது. அதற்கு அஞ்சி, கூரை வீடு ஒன்றில் தஞ்சமடைந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 44 பேர் உயிரோடு தீக்கிரையாக்கப்பட்டனர்.
அடக்குமுறைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் சாட்சியாக திகழும் இந்தச் சம்பவத்தின் கோர நினைவுகளைத் தாங்கியபடி இன்னமும் வாழ்ந்து வருகின்றனர் இக்கிராமத்தின் மூத்த குடிமக்கள் பலர். கீழவெண்மணியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அங்கு நினைவுத்தூண் நிறுவப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. பட்டியலின, விவசாய கூலித் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறையின் கோரமுகத்தை வெளிக்காட்டியபடி, எவ்வித முன்னேற்றமும் இன்றி எளிய கிராமமாகவே தொடர்கிறது கீழவெண்மணி.