புதுச்சேரியில் முதுநிலை மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் மீது தொடரப்பட்ட சிபிஐ வழக்கு, புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பரிசு என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் முதுநிலை மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பாக 2 ஐ.ஏ.ஏஸ் அதிகாரி உள்ளிட்ட 13 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்று ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார். சி.பி.ஐ. சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதால், இனி முறைகேடு இருக்க வாய்ப்பு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த வருடம் நான் இங்கு இருக்கிறேனோ இல்லையோ, மருத்துவ சேர்க்கையில் எந்த குளறுபடியும் இருக்காது என்றும், மருத்துவ இட ஒதுக்கீட்டில் அதிக கட்டணம், ஊழல், சுரண்டல், பணம் பறித்தல் ஆகியவை இருக்காது என்றும், இதுவே புதுச்சேரி மக்களுக்கான தீபாவளி பரிசு என்றும் கூறியுள்ளார்.