தமது ஆங்கில பேச்சை தமிழில் மொழிபெயர்க்க ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி கம்பன் கழகத்தின் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் 53வது கம்பன் விழா இன்று தொடங்கியது. விழாவை ஆளுநர் கிரண்பேடி தொடக்கி வைத்தார். இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இலங்கை அமைச்சர் வி.எஸ்.இராதாகிருஷ்ணன், ஐதராபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.இராமசுப்ரமணியன் உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தான் பேசும் ஆங்கில உரையை மொழிபெயர்ப்பு செய்ய, முதலில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனை அழைத்தார். அவர், தனக்கு முடிந்தவரை தமிழில் மொழிபெயர்ப்பு செய்வதாகக் கூறியபோது ஆளுநர் சற்றும் தாமதிக்காமல் முதலமைச்சர் தன் ஆங்கில உரையை தமிழில் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டுமென அழைத்தார்.
ஏற்கனவே இரண்டு பேருக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த அழைப்பு விழாவில் கூடி இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர்கள் பலமாக கைதட்டத் தொடங்கினர். இதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி ஆளுநரின் உரையை மொழிபெயர்ப்பு செய்தார். அப்போது பேசிய ஆளுநர், அடுத்த 10 நிமிடத்துக்கு உங்களுடன் நட்பாக இருக்க விரும்புவதாகக் கூறினார். ’நானும் அந்த நிமிடம் வரை மட்டுமே நட்பாக இருக்க விரும்புகிறேன்’ என முதலமைச்சரும் கூற, உடனே ஆளுநர் ’ஆனால் நான் இந்த நட்பு, காலம் முழுவதும் தொடர வேண்டும்’ என நினைக்கிறேன் என்றார். பின்னர் முதலமைச்சர் உரையை மொழிபெயர்த்தார். தனது பேச்சை முதன்முதலாக மொழிபெயர்த்த நாராயணசாமிக்கு கிரண்பேடி மேடையில் நன்றி கூறினார்.
இந்த சுவாரஸ்யமான நிகழ்வு கூடியிருந்தவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ஆளுநரின் பேச்சை முதல்வர் நாராயணசாமி மொழிபெயர்ப்பு செய்ததற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவருமான அன்பழகன் எதிர்ப்புத் தெரிவித்து விழாவில் இருந்து வெளியேறினார்.
விழாவில் கம்பராமாயணப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதலமைச்சர் மற்றும் ஆளுநர் சார்பில் தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.