சேலத்தில் மூளை சாவு அடைந்த ஒருவரின் சிறுநீரகம் அகற்றப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பெண் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. காவல்துறையினர் உதவியுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சிறுநீரகம் சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் இரு சக்கர வாகனதில் சென்றபோது விபத்துகுள்ளாகி சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், செந்தில்குமார் மூளைசாவு அடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் கொடுக்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதனிடையே, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சிறுநீரகம் தேவை என மத்திய அரசு பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அக்குடும்பத்தினருக்கு முறைப்படி தகவல் கொடுக்கப்பட்டு சேலம் அரியானூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, உறுப்பு தானத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மூளைச்சாவு அடைந்த செந்தில்குமாரின் கண்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, சிறுநீரகம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மருத்துவமனைகளுக்கும் இடையே சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவு என்பதால், குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்ல மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, முக்கிய சாலைகளில் சிறுது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் சிறுநீரகம் கொண்டுசெல்லப்பட்டது. பதினைந்து நிமிடத்தில் சிறுநீரகம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நிலையில் காவல்துறை, மருத்துவர்கள், செவலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் உள்ளிட்டோரின் கூட்டு முயற்சியால் பதினைந்து கிலோமீட்டர் தொலைவை ஒன்பது நிமிடத்தில் கடந்து சிறுநீரகம் ஒப்படைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு பொருத்தப்பட்டது.