தமிழ்நாடு

சிறுவனை கடத்தியதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

சிறுவனை கடத்தியதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

Rasus

சேலத்தில் சாலை ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடத்திச் சென்றதாக பெண் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் ஜான்சன் நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஜஸ்டின்- மகாலட்சுமி. இவர்களது 4 வயது மகன் சரவணன் வீட்டு வாசலில் தன் சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த பெண் ஒருவர், சரவணனை அவருடன் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை எனப் பதறிப்போய் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்கள் வீட்டிற்கு சற்று தூரத்தில் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து கடுமையாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, அஸ்தம்பட்டி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் செல்வி என்று‌ தெரியவந்துள்ளது.

மேலும், அந்தப் பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர், குழந்தை கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? எனக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.