தமிழ்நாடு

"ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்றால் ஒரே ஜாதி ஏன் இல்லை?"- கி.வீரமணி பேச்சு

webteam

“மனிதன் இறந்த பிறகு, அவன் பிணத்திற்கு முன்பும் சாதியே நிற்கிறது. இங்கே மனிதன் சாகிறான், ஆனால் சாதி சாவதில்லை” என ராஜபாளையத்தில் நடந்த கூட்டத்தில் திக தலைவர் கி. வீரமணி பேசினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பேருந்து நிலையம் எதிரே திராவிடர் கழகம் சார்பில், ஈரோடு முதல் கடலூர் வரை சமூகநீதி திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திக தலைவர் கி. வீரமணி மற்றும் சிபிஎம், சிபிஐ, மதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கி. வீரமணி பேசுகையில், “அடிக்க அடிக்க பந்துபோல எழும்புவது இந்த இயக்கம். எதிர்நீச்சல் அடித்தே வளர்ந்த இயக்கம், இந்த திராவிட இயக்கம். எந்த கொம்பன் வந்தாலும் இந்த அணியை அசைக்க முடியாது. எல்லா பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதி. சமூக நீதிக்கு எதிரான புத்தகம் மனு தர்மம். இங்கு எல்லோரையும் கடவுள்களை பயமுறுத்தி நம்பவைத்துள்ளார்களே தவிர அறிவுபூர்வமாக நம்பவைக்கவில்லை. சரஸ்வதி பூஜை மட்டும் கொண்டாடும் போது, நாம் 100 சதவிகிதம் படிக்கவில்லை. நீதிக்கட்சி வரும் முன்னர் 100க்கு 8 பேர் மட்டுமே படித்த நிலையில் தற்போது 80 பேர் படித்துள்ளனர். அதற்கு காரணம் தந்தை பெரியார்.

பிரதமர் கூறுவது போல் `ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி’ என்றால் ஒரே ஜாதி என்பது ஏன் இல்லை? இறந்தால் தொல்லை இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் மனிதன், இறந்த பின்னரும் தொல்லை தொடர்கிறது. இறந்த பிணத்திற்கு முன்பாகவும் சாதி நிற்கிறது. மனிதன் சாகிறான், சாதி சாவதில்லை.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பல பதவிகளில் பெண்கள் உள்ளனர். மற்ற வட மாநிலங்களில் இந்த நிலை இல்லை. அங்கெல்லாம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் விடுவதில்லை. தமிழ்நாட்டில் 50 சதவிகிதம் பெண்கள் நகர சபை தலைவராக இருப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல். இந்தியாவில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு என வட மாநிலத்தை சேர்ந்த பெண்ணொருவர், நீதிமன்றத்தில் கூறுகிறார். அதுதான் திராவிட மாடல்.

மத்திய அரசால் இன்று வேலைவாய்ப்பை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டாலும், 100 வருடங்களுக்கு முன்பே வேலைவாய்ப்புக்காக தொடங்கப்பட்டது சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் வெற்றி பெற்றால் திமுகவுக்கும், காங்கிரஸூக்கும் பெயர் சென்றுவிடும் என்று ஜெயலலிதா, சுப்பிரமணியன் சாமி மற்றும் சோ ராமசாமி ஆகியோர் தனித்தனியாக வழக்கு போட்டு அதை தடுத்து விட்டனர். இதற்கு ராமர் பாலம் என்ற நம்பிக்கையை முன் வைத்தனர். ஆனால் இன்று வரை அறிவியல்பூர்வமாக அவர்களால் அதை நிரூபிக்க முடியவில்லை. எனவேதான் மீண்டும் சேதுசமுத்திர திட்டத்தை தொடங்கி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் இயற்றினார்” என்றார்.