தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க.வின் புதிய மாநில நிர்வாக பட்டியலை இன்று வெளியிட்டார் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த பட்டியல் வெளியாகி இருக்கக்கூடிய நிலையில், பா.ஜ.க.வில் ஓரம் கட்டப்படுவதாக பார்க்கப்பட்ட குஷ்பு சுந்தர் மாநில துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, பால் கனகராஜ் உள்ளிட்ட 14 பேர் மாநில துணைத்தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில பொதுச்செயலாளர்களாக பொன்.வி.பாலகணபதி, எம்.முருகானந்தம், கார்த்தியாயினி உள்ளிட்ட 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில பிரிவு அமைப்பாளராக கே.டி.ராகவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில செயலாளர்களாக கராத்தே தியாகராஜன், சுமதி வெங்கடேசன், வினோஜ்.பி.செல்வம், அமல் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநில பொதுச்செயலாளர் (அமைப்பு) கேசவ விநாயகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில இளைஞரணி தலைவராக எஸ்.ஜி.சூர்யாவும், மாநில மகளிர் அணி தலைவராக கவிதா ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் மாநில நிர்வாக பட்டியலில் நடிகர் சரத்குமார் மற்றும் விஜயதாரணிக்கு பொறுப்புகள் வழங்கப்படவில்லை.
இன்று வெளியான பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில், விஜயதாரணி புதியதலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அப்போது பொறுப்பு கிடைக்காதது குறித்து பேசிய அவர், தேசிய அளவிலான பட்டியல், தமிழ்நாடு அளவிலான பட்டியல் இன்னும் வரவேண்டி உள்ளது. அடுத்தக்கட்ட பட்டியலில் பொறுப்பு வரும் என நினைக்கிறேன் என்று கூறினார்.
மேலும் தவெகவில் இணையப்போவதாக வெளியான தகவல் குறித்து பதிலளித்த அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் நான் இணையப்போவதாக சமூகவலைதளங்களில் வெளியாகும் செய்தி தவறானது. அதை நான் மறுக்கிறேன் என்றும் பேசியுள்ளார்.