தமிழ்நாடு

"பெண்களுக்கு கல்வி தான் முக்கியம்; கல்வி இருந்தால் எதையும் சாதிக்க முடியும்"- குஷ்பு

"பெண்களுக்கு கல்வி தான் முக்கியம்; கல்வி இருந்தால் எதையும் சாதிக்க முடியும்"- குஷ்பு

webteam

“கல்வி இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும்” என்று சர்வதேச மகளிர் தின விழாவில் உரையாற்றினார் குஷ்பு.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்புவுடன் இணைந்து கீதா சிவக்குமார், பத்ம ப்ரியா ரவி, மணிமங்கை, சத்யநாராயணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிறுவனரும், எம்.பி்யுமான டாக்டர் பாரிவேந்தர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ சுந்தர், முதல் பெண் வனவிலங்கு புகைப்படக் கலைஞரும், வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனருமான ராதிகா ராமசாமி உட்பட பலரும், அவர்களுடன் பல்கலைக்கழக மாணவிகளும் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து மகளிர் தின விழாவில் பேசிய குஷ்பு, “எங்கள் குடும்பத்தில் இரவு பகலாக உழைத்து எங்களுக்காக கஷ்டப்பட்டவர் என் அம்மா. நான் இந்தி சினிமாவில் பயணிக்க தொடங்கிய பின்பு, கடந்த 1984 - 2011 வரை எனக்கு தாய் போல் உறுதுணையாக எனது நிழலாக இருந்தவர், எனக்கு சிகையலங்காரம் செய்தவர். எனக்கு தென்னிந்தியாவில் முதல் தோழி சினிமா டான்ஸ்மாஸ்டர் பிருந்தா தான். என்னை வாழ்க்கையிலும் ஆட வைத்தவர் அவர்.

அதேபோல், எனது கணவர் இல்லை என்றால் நான் இல்லை. எனக்கு பின்னால் அவர் இருக்கிறார். எங்களுக்கு நேற்று தான் 23வது ஆண்டு  திருமணநாள். கணக்கு பார்த்தால் 28 ஆண்டுகள். அதற்கு முன்பு 5 வருடம் என்னை சைட் அடித்துக்கொண்டு இருந்தார். உலகத்தில் குஷ்பு யாருக்கு பயப்படுகிறேனோ இல்லையோ... எனது முதுகெலும்பாக இருக்கும் எனது மகள்களுக்கு பயப்படுவேன்.

எனக்கு தேசிய மகளிர் ஆணையத்தில் பதவி கிடைத்தவுடன் எனது மகள்கள் சொன்ன வார்த்தை இதுதான் - ‘அம்மா, நீங்கள் எங்களுக்காக உழைத்து போதும். இனி நீங்கள் உங்களுக்காக வேலையை பாருங்கள்’ என்றனர். என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். நான் பள்ளியில் படிக்கும் போது எப்போதும் கடைசி பெஞ்ச் தான். கணிதமும், அறிவியலும் எனக்கு மண்டையில் ஏறாது. ஆனால், எனது டீச்சருக்காக கணக்கு பாடத்தில் 100க்கு 100 மார்க் வாங்குவேன். போகும் பாதை போர் அடிக்கிறது என்று செல்லாமல்  நீங்கள் போகும் பாதையை ரசிக்க ஆரம்பிக்கும் போது தான் சந்தோசம் கிடைக்கும். பெண்கள் அதிக வலிமை வாய்ந்தவர்கள். சமூகத்தில் மல்டி டாஸ்க் வேலைகளையும் பெண்கள்தான் செய்து வருகின்றனர். வயல்வெளிகளில் கூட கடினமான  வேலையை பெண்கள் பார்க்கின்றனர்” என்றார்.

தொடர்ந்து தன் அனுபவம் பற்றி பேசுகையில், “எனது அழகின் ரகசியம் அனைவரும் கேட்பார்கள். அதை இப்போது சொல்கிறேன். ‘நான் நன்றாக தூங்குவேன். பிரச்சனை இருந்தால் பேசி தீர்த்துக்கொள்வேன். வெளிப்படையாக இருப்பேன். எதிலும் பொறுமை வேண்டும்’. வாழ்க்கையில்  எதையாவது சாதிக்க வேண்டும். அதுவும் எஸ்ஆர்எம் பல்கலை கழக நிறுவனர் பாரிவேந்தர் போல நிலையான வளர்ச்சி வேண்டும். வாழ்க்கையில் பொறுமை, தேவை. கீழே விழுந்து அடிப்பட்டு ரத்தம் வந்தால் கூட துடைத்துவிட்டு அடுத்த இலக்கைநோக்கி பயணிக்க வேண்டும். அப்போது தான் வெற்றியை ருசிக்க முடியும்.

எனக்கு சினிமாவை தவிர வேறு வேலை பார்க்க சொன்னால் எனக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால் எனக்கு கல்வி இல்லை. பெண்களுக்கு கல்வி தான் முக்கியம். கல்வி இருந்தால் எதையும் சாதிக்க முடியும்” என்றார்.

விழாவின் நிறைவில், எஸ்ஆர்எம் பல்கலைகழக சாதனை மாணவிகளுக்கு  சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை கீதா சிவக்குமார், பத்மப்ரியா ரவி, மணிமங்கை  சத்யநாராயணன் ஆகியோர் வழங்கினர்.