இந்த இணைப்பில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்க்கலாம்.
2026ஐ வரவேற்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், ஒவ்வொரு புத்தாண்டையும் நாம் இனிதாகத்தான் வரவேற்கிறோம். ஆனால், அரசியல் அப்படியல்ல. எதிர்பாராத திருப்பங்கள், கூட்டணிகள், விமர்சனங்கள் என ஆண்டு முழுவதும் பரபரவென்றே இருக்கும். 2025ஆம் ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல.. இந்த ஆண்டில் தமிழ்நாட்டு அரசியலில் உரையாடலை உண்டாக்கிய முக்கிய நிகழ்வுகளை தொகுப்பாக பார்க்கலாம்..
06 ஜனவரி 2025
2025-ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அரசு அளித்த உரையை வாசிக்காமலேயே வந்த வேகத்தில் வெளிநடப்பு செய்தது பரபரப்பை கிளப்பியிருந்தது. பின்னர், இந்த சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில், ”சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென ஆளுநர் வேண்டுகோள் வைத்த நிலையில், அவரது வேண்டுகோள் மறுக்கப்பட்டது. ஆளுநர் உரைக்கு முன் தேசிய கீதம் பாடப்படாதது தேசிய கீதத்துக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை. இதனையடுத்து மிகுந்த வேதனையுடன் ஆளுநர் வெளியேறினார்” என்று தெரிவிக்கப்பட்டது. இது, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும், நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையின்றியே தொடங்கியது.
08 ஜனவரி 2025
கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. பெரியார் குறித்து ஆதாரமில்லாமல் பேசும் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் சீமானுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
05 பிப்ரவரி 2025
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் மறைந்ததையடுத்து அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. முன்னதாக, காங்கிரஸ்க்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், இம்முறை திமுக நேரடியாக களமிறங்கியது. திமுக வேட்பாளரான வி.சி.சந்திரகுமார் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த இடைதேர்தலை அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தன.
ஜனவரி -20
தவெக தொடங்கப்பட்டு ஓராண்டாகியும் அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களைச் சந்திக்கவில்லை என்ற விமர்சனங்கள் இருந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம், பரந்தூர் அருகே விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக 910 நாட்களாக போராடிவந்த மக்களை விஜய் சந்தித்தார். கட்சி தொடங்கியபின் விஜயின் முதல் மக்கள் சந்திப்பு என்பதால் இது தமிழக அரசியல் களத்தில் கவனம் ஈர்த்தது. அந்த சந்திப்பில், போராட்டக்குழுவினருக்கு ஆதரவாக திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
04 பிப்ரவரி 2025
முருகனின் முதல் படைவீடான மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்திருக்கும் மலையின் மேலே சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹாவும் அமைந்துள்ளது. இந்த மலையை சார்ந்து நடக்கும் பிரச்சனை இந்திய அளவில் பேசுபொருளாகியிருந்தாலும், இந்த மலை தொடர்பாக இஸ்லாமியார்களுக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே பிப்ரவரி மாதமே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது.
தர்ஹாவில் கந்தூரி கொடுக்க ஆடு, சேவலுடன் வந்த இஸ்லாமிய குடும்பத்தினர் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டதிலிருந்து பிரச்னை தொடங்கியது. தங்கள் வழிபாட்டு உரிமையை தடுப்பதாக இஸ்லாமிய அமைப்பு போராட்டம் நடத்த, திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற இஸ்லாமியர்கள் முயற்சித்து வருவதாக இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்த முயன்றனர். இதன்காரணமாக, மதுரையில் 144 தடை உத்தரவு போடப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பலரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்து அமைப்பினர் சார்பில் திருப்பரங்குன்றம் மலையின் மேல் ஆடு, கோழி பலியிடுவதையும் அசைவம் சமைப்பதையும், சாப்பிடுவதையும் தடைசெய்து உத்தரவிடும் வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.
ஏப்ரல் -11
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோதே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இது கூட்டணிக்குள் பெரும் விரிசலை ஏற்படுத்த, 2023 செப்டம்பர் 25ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமியின் டெல்லி பயணத்திற்கு பின் இருகட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்து 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை சேர்ந்து சந்திக்கப்போவதாக அறிவித்தன. முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வற்புறுத்தலின் காரணமாகவே பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை பதவி நீக்கப்பட்டதாகவும், அதன் பிறகே பழனிசாமி மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி உருவாக்கியிருப்பதாகவும் அப்போது பேசப்பட்டது.
மே – 30 - 2025
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், "கன்னட மொழி தமிழிலிருந்து வந்தது” என்றார். இக்கருத்து, கர்நாடகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்தது.
கமல்ஹாசன் வரலாறு தெரியாமல் பேசுவதாகவும் அவர் கன்னட மக்களிடம் மன்னிப்பு கோராவிட்டால் கர்நாடகத்தில் அவரது படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் எனவும் கன்னட அமைப்புகள் தெரிவித்தன. இதற்கு விளக்கமளித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் அன்பு ஒருபோதும் மன்னிப்புக் கேட்காது என்று தெரிவித்திருந்தார்.
ஜூன் 22
மதுரையில் இந்து முன்னணி நடத்திய ’முருக பக்தர்கள் மாநாடு’ பல சர்ச்சைகளை உருவாக்கியது. பா.ஜ.க ஆதரவுடன் நடந்த இந்த மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சனம் செய்து வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்றனர். ஆனால், அவர்கள் அந்த வீடியோ தொடர்பாக அதிருப்தி தெரிவிக்கவில்லை என்ற சர்ச்சை உருவானது. பின் அதிமுக ஐடி விங் கண்டனம் தெரிவித்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விளக்கமளித்திருந்தனர்,
ஜூன் 28
சிவகங்கை மாவட்டத்தில் நகை திருட்டு வழக்கில் தனிப்படை காவலர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் காவல்துறையினர் மற்றும் தமிழக அரசின் மீது பெரும் விமர்சனங்களை உண்டாக்கியது. இதற்கிடையே அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை அரசு அறிவித்தது. தொடர்ந்து, முதலமைச்சர் முக ஸ்டாலினும் அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கோரியிருந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 13
அஜித்குமாரின் மரணத்திற்கு நீதிகேட்டு தவெக தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. "சாரி வேண்டாம்... நீதி வேண்டும்" போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு அரசியல் களத்தில் தவெக நடத்திய இப்போராட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
ஜூலை -21
அதிமுகவில் எம்ஜிஆர் காலம் தொட்டும் உறுப்பினராக இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் அமைந்ததில் கடும் அதிருப்தியில் இருந்தார். கூட்டணியை எதிர்த்து வெளிப்படையாகவே கருத்துகளைத் தெரிவித்து வந்த அவர், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இவருக்கு திமுக இலக்கிய அணித் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் - 8
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தக் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பன போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை ஆகஸ்ட் - 8 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
ஆகஸ்ட் 13
தனியார்மய எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் போராட்டத்தை முன்னெடுத்தனர். 13 நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும்படி உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், தூய்மைப்பணியாளர்களை அதிரடியாக நள்ளிரவில் கைது செய்தது காவல் துறை. பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பணியின் போது உணவு, மருத்துவ உதவி போன்ற நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்து தூய்மை பணியாளர்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது.
செப்டம்பர் 27
கரூரில் தவெக நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு சார்பிலும் தவெக சார்பிலும் நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டன.
சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு உயிரிழந்த குடும்பத்தாரை சென்னை அழைத்து ஆறுதல் கூறினார் தவெக தலைவர் விஜய். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 8
தி.மு.க.வின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்சியின் இளைஞர் அணி ‘தி.மு.க 75 அறிவுத் திருவிழா’ என்னும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த விழாவில் புத்தகக் கண்காட்சி, கருத்தரங்கு, அரசியல் வரலாறு, தியாகங்கள் மற்றும் இலக்கியம் பற்றிய பகிர்வுகள், புத்தகங்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் போன்றவை வெளியிடப்பட்டன. இது உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்ட நிகழ்வு என எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.
நவம்பர் 27
எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்த செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து பிரிந்திருப்பவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் எனப் பேசினார். இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
பின், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து தனிகட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் தன் ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் இணைந்தார். பின் அவருக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், கொங்கு மண்டல பொறுப்பாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
பாமகவில் 2024-ஆண்டு இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நியமித்தது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் ஏற்ப்பட்ட பிரச்சனை 2025ல் உச்சகட்டத்தை எட்டியது. பாமக அன்புமணி தரப்பு மற்றும் ராமதாஸ் தரப்பு என இரண்டாகப் பிரிந்து செயல்படத் தொடங்கின.
ராமதாஸ் தரப்பு ஒரு பக்கம் சிறப்பு பொதுக்குழுவை கூட்ட, மறுபுறம் அன்புமணி ஒருபுறம் பொதுக் குழுவை கூட்டியதுயது. மேலும், ஓராண்டுகளுக்கு அன்புமணியே பாமகவின் தலைவராக தொடர்வார் என அன்புமணி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்து. இதற்கு ராமதாஸ் தரப்பு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதியிருந்தது. இந்தநிலையில் தான், கடந்த நவம்பர் 18-ஆம் தேதி ராமதாஸ் தாரப்புக்கு தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில் 2026 ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை அன்புமணியே பாமகவின் தலைவராக தொடர்வார் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
டிசம்பர் 19
தமிழ்நாட்டில் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் முடிந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியலுக்கு முன்பு, மாநிலத்தில் மொத்தம் ஆறு கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலின்படி, ஐந்து கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் இருக்கின்றனர்.