தமிழ்நாடு

சென்னை காசிமேட்டில் தீப்பற்றி எரிந்த விசைப்படகு: போராடி அணைத்த தீயணைப்புத் துறையினர்!

kaleelrahman

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு தீயில் எரிந்து சேதமானது. படகில் மீன் பிடிக்க சென்றவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் மூலமாக மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், பரிமளா என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிப்பதற்காக 9 பேர் கொண்ட குழுவினர் 10 நாட்களுக்கு தேவையான மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள், டீசல், உணவு பொருட்கள் எடுத்துக்கொண்டு செல்ல தயாராகினர்.

இந்நிலையில் விசைப்படகின் டீசல் இன்ஜினின் செல்ப் மோட்டாரை இயக்கிய போது அதிலிருந்து தீப்பற்றியதாக தெரிகிறது. உடனடியாக டீசல் பரவியதால் தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதனையடுத்து விசைப்படகில் இருந்த மீனவர்கள், தீயில் இருந்து தப்பிக்க கடலில் குதித்தனர். அவர்கள் கரையேறிய பின்பு, சக மீனவர்களுக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல் நிலையத்திற்கும், ராயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட 3 தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். படகில் டீசல் இருந்த காரணத்தால் தீ மளமளவென்று எரிந்து, அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீயில் எரிந்த விசைப்படகின் மதிப்பு ரூ.50 லட்சம் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.