தமிழ்நாடு

கேரள மாணவி காஞ்சிபுரத்தில் எரித்துக் கொலையா ?

கேரள மாணவி காஞ்சிபுரத்தில் எரித்துக் கொலையா ?

Rasus

கேரளாவில் மாயமான கல்லூரி மாணவி காஞ்சிபுரத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா..? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள கேரளா போலீசார் காஞ்சிபுரம் வருகின்றனர்.

கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தன் தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தவர் ஜேசா. இவர் காஞ்சிரப்பள்ளியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே முக்குத்தட்டு பேருந்து நிறுத்தத்தில் உள்ளூர் மக்களால் கடைசியாக மார்ச் 22-ம் தேதி பார்க்கப்பட்ட ஜேசா அதன் பின்பு மாயமானார். இதுகுறித்து பத்தனம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜேசாவை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் 50 நாட்கள் கடந்த பின்பும் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால் காணாமல்போன 20 வயது கல்லூரிப் பெண் ஜேசா பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என கேரளா அரசு அறிவிப்பு செய்து இருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அப்பகுதியில் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார், எரிந்து கரிக்கட்டையாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்..? எந்த ஊரைச் சேர்ந்தவர்..? கொலையாளிகள் யார்.. ? கொலைக்கான காரணம் என்ன..? என்பது இதுவரை தெரியவில்லை. மர்மநபர்கள், அந்த பெண்ணை வேறு எங்காவது வைத்து கொலை செய்து விட்டு உடலை இங்கு கொண்டு வந்து எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் காணாமல்போன 20 வயது கல்லூரிப் பெண் ஜேசாவின் வயது, உயரம், எடை உடலில் குறிப்பிட்ட சில அடையாளங்கள் காணப்படுவதால் சந்தேகத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம்  கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, கேரளா போலீஸாரிடம் இந்த கொலை தொடர்பாக தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் இன்று கேரளா போலீசார் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு விசாரணை மேற்கொள்ள வருகின்றனர். மிகவும் பரபரப்பாக கேரளத்தில் பேசப்படும் காணாமல்போன 20 வயது கல்லூரிப் பெண் ஜேசா வழக்கில் திடீரென்று திருப்பம் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தகவல்கள்: பிரசன்னா, செய்தியாளர்.