தமிழ்நாடு

தமிழகத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி - கேரள அரசு அறிவிப்பு

தமிழகத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி - கேரள அரசு அறிவிப்பு

rajakannan

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் அவசர உதவிக்காக ரூ10 கோடி வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன்
தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பினராயி விஜயன் தமது ட்விட்டரில், “கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழக சகோதரர்களுக்கு கேரள மக்களின் ஆதரவை
தெரிவித்துக் கொள்கிறோம். புதன் கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அவசர உதவியாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். உணவு, துணி, ஆடைகள் உள்ளிட்ட 14 லாரிகளில் அவசர பொருட்களை ஏற்கனவே அனுப்பி வைத்தோம்.

ஆறு மருத்துவ குழுவும் கேரள மின்சார வாரியத்தை சேர்ந்த 72 ஊழியர்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணியில்
ஈடுபட்டு வருகிறார்கள். தேவை என்றால் மேலும் உதவியை அனுப்புவோம் என்று தமிழக அரசுக்கு உத்தரவாதம் அளித்தோம்” என்று
குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு
மருத்துவக்குழுவினர் வந்திருந்தனர். மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய இந்தக் குழு தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை
மாவட்டங்களில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர். கேரள அரசு மருத்துவர்கள், செவிலியர் என 100க்கும் அதிகமானோர் தமிழகம்
வந்தனர். 

இதனிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ10 கோடி நிவாரண நிதி அளித்த கேரள அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது ட்விட்டரில், “வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு” என கமல் பதிவிட்டுள்ளார்.