புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள் pt desk
தமிழ்நாடு

நெல்லை: மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ள கேரள புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள்... அதிர்ச்சி வீடியோ!

கேரள மாநிலத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள் மற்றும் மருந்துப் பொருட்களை மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வந்து திருநெல்வேலி அருகே கொட்டிச் சென்றுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: மருதுபாண்டி

திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள், கனிம வளங்கள், பால், அத்தியாவசியப் பொருட்கள், சிமெண்ட் போன்றவை அனுப்பப்படுகின்றன. ஆனால், கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள்

நாகர்கோவில் வழியாக கொண்டுவரப்படும் கழிவு மூட்டைகளை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பணகுடி, நாங்குநேரி வட்டாரங்களில் கொட்டுகின்றனர். தென்காசி வழியே லாரிகளில் கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகளை கடையம், ஆலங்குளம் வட்டாரங்களில் கொட்டுகின்றனர். இந்நிலையில், நேற்று திருநெல்வேலி சீதப்பற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர் பகுதியில் நூற்றுகணக்கான மூட்டைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

இரவு நேரம் தென்காசி வழியே வரும் லாரிகள் சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர் வட்டாரங்களில் குளங்களில் இவற்றை கொட்டிச் சென்றுள்ளனர். குறிப்பாக இந்தப் பகுதியில் உள்ள ஆலைகளுக்கு சரக்குகளை ஏற்ற வரும் லாரிகள், கேரளாவில் இருந்து வரும்போது இத்தகைய கழிவுகளை ஏற்றி வருகின்றனர். இந்தக் கழிவுகள் அனைத்தும் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளாகும். இதனை செங்கோட்டை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். அவர்கள் செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை கழிவுகளை மக்கள், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோடகநல்லூர் மற்றும் பழவூர் கிராமங்களில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் உட்பட பல இடங்களில் கொட்டப்பட்டுள்ளன.

கிராம மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி உதவி இயக்குனர் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக பட்டா உரிமையாளர்கள் மற்றும் அரசு சார்பாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.