தமிழ்நாடு

கீழடியின் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி - எதிர்பார்ப்பில் மக்கள்

webteam

கீழடியில் தொடங்கவுள்ள ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் இதுவரை ஐந்து கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றிருக்கின்றன. இவற்றின் மூலம் தமிழரின் பழங்கால வரலாற்றை பறைசாற்றும் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கவுள்ளன. ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் மூலம் தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் குறித்து பல தகவல்கள் தெரியவந்துள்ள நிலையில், புதிய ஆய்வு குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி கீழடியில் மட்டும் நடைபெற்று வந்த நிலையில், ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஐந்து கட்ட அகழாய்வில் தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் உருவம் உள்ளிட்ட 15 ஆயிரத்து 500 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளும் வகையில் ஆறாம் கட்ட அகழாய்வு திட்டமிடப்பட்டுள்ளது.‌

இந்த 6ம் கட்ட அகழாய்வில் 10 தொல்லியல் ஆய்வாளர்கள், 60 ஆராய்ச்சி மாணவர்கள், 200 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். ஆறாம் கட்ட அகழாய்வில் காந்தவியல் கருவி, ஜி.பி.எஸ் கருவி என பல்வேறு தொழில்நுட்பங்க‌ள் பயன்படுத்தப்படவுள்ளன.