பழந்தமிழரின் வரலாற்றை விளக்கும் கீழடி குறித்த விரிவான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணா தயாரித்தார். 2014ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆய்வில் நவீன கருவிகள் உதவியுடன் சோதனைகள் நடத்தப்பட்டு கிடைக்கப்பெற்ற விவரங்களை கொண்டு 982 பக்க அறிக்கை உருவாக்கப்பட்டது. இதில் கார்பன் டேட்டிங் சோதனை மூலம் கீழடியில் கிமு 200ஆம் ஆண்டில் மனித வாழ்க்கை இருந்தது தெரியவந்தது. இந்த அறிக்கை 2023ஆம் ஆண்டு தொல்லியல் துறை இயக்குநருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
2 ஆண்டுகளாகியும் இந்த அறிக்கை வெளியிடப்படாதது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது அதில் மேலும் நுட்பமான விவரங்களுடன் திருத்தங்கள் செய்யுமாறு அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு தொல்லியல் துறை கடிதம் எழுதியுள்ளது. அதில் கிமு 5ஆம் நூற்றாண்டிலிருந்து 8ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் ஒரு இடத்திற்கு திட்டவட்டமான நிரூபணம் தேவைப்படுவதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,. மற்ற இரு இடங்கள் குறித்த தகவல்கள் அறிவியல்பூர்வமாக பெறப்படவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சில வரைபடங்கள் போதிய தெளிவின்றி இருப்பதாகவும் சில விவரங்கள் அளிக்கப்படவில்லை என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நிபுணர்கள் அளித்த பரிந்துரையின்படி அறிக்கை திருத்தி எழுத கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.