தமிழ்நாடு

கீழக்கரையில் அனுமதியின்றி வீடியோ எடுத்த ஆந்திர இளைஞர்கள் - போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

webteam

கீழக்கரை நகரை அனுமதியின்றி வீடியோ எடுத்த ஆந்திர மாநில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் உள்ளூர் வாடகை கார் எடுத்துக்கொண்டு காரின் மேற்பகுதியில் கேமரா பொருத்தி கடந்த இரண்டு நாட்களாக கீழக்கரை நகர் பகுதியில் பல்வேறு இடங்களை வீடியோ எடுத்துள்ளனர்.

இதனைப் பார்த்த உள்ளூர் மக்கள் அந்த காரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது காரில் இருந்த இளைஞர்கள் தெலுங்கில் பேசியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள் இது குறித்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்குவந்த கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர், காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், காரில் இருந்தவர் ஆந்திராவைச் சேர்ந்த ஜீவன் என்பதும், அவர் யூடியூப் சேனல் நடத்தி வருவதாகவும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று சாலை, ஊர்களின் அமைவிடம் தொடர்பாக படம் எடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ எடுப்பதற்காக ராமநாதபுரத்தில் இருந்து வாடகை கார் எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரிடம் வீடியோ எடுப்பதற்கான அனுமதி கடிதம் இல்லை என தெரிய வந்ததையடுத்து காரின் மேற்பகுதியில் பொருத்தி இருந்த கேமரா அகற்றப்பட்டது.