தமிழ்நாடு

9 மாதங்களுக்கு பின் கீழடி தொல்பொருள் ஆராய்ச்சி கண்காட்சி மீண்டும் தொடங்கியது!

9 மாதங்களுக்கு பின் கீழடி தொல்பொருள் ஆராய்ச்சி கண்காட்சி மீண்டும் தொடங்கியது!

Sinekadhara

கொரானா எதிரொலியால் மூடப்பட்டிருந்த கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல் துறை ஆய்வு நடத்தி அகழாய்வு செய்ததில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஆயிரக்கணக்கில் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சிப்படுத்தும் வகையில், கீழடி நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வு தொல்பொருள்கள் கண்காட்சியானது கடந்த 2019 -ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கீழடி அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சியை அவர் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

இக்கண்காட்சி உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் விசாலமான இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு, இதில் சுடுமண் பானைகள், எழுத்தாணிகள், உலோக ஆயுதம், தங்கத்தில் செய்யப்பட்ட அணிகலன்கள், சுட்ட மண்பானை ஓடுகள், விளையாட்டுப் பொருள்கள், தாயக்கட்டைகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள், சூதுபவளம், கருப்பு சிவப்பு வளையப் பானைகள் எனப் பல பொருள்கள் பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அப்பொருள்கள் பற்றிய விவரங்களும் வாசிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சி கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக மூடப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாதிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் கண்காட்சியை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்து, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.