தமிழ்நாடு

கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி - அதிநவீன கருவிகளை பயன்படுத்த திட்டம்

கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி - அதிநவீன கருவிகளை பயன்படுத்த திட்டம்

webteam

கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் தொடங்கிவைத்த நிலையில், ஆய்வின் போது அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை தொல்லியல் துறையினர் பயன்படுத்த உள்ளனர். 

கீழடி, சிவகங்கை 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழர்களின் ஆதாரங்களை கொண்டது கீழடி. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆறு கட்ட அகழாய்வில் தமிழர்களின் மேன்மையை உலகறியச் செய்யும் வகையில் கட்டுமானங்கள், எச்சங்கள் கிடைத்துள்ளன. அதன்படி, கீழடி பண்டைய தமிழர்களின் தொழில் கூடமாகவும், கொந்தகை ஈமக்காடுகளாகவும், அகரம் மற்றும் மணலூர் வாழ்விடமாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விடங்களில் தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் மனித முகம், தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி, முதுமக்கள் தாழி கிடைத்துள்ளன. மேலும் செங்கல் கட்டுமானங்கள், உறை கிணறுகள், நீர் வழிப்பாதை, தண்ணீர்த் தொட்டி, மனித மற்றும் விலங்கு எலும்பு கூடுகள், கருங்கல்லில் ஆன எடைக்கற்கள், கரிம மாதிரிகள், கிபி12ஆம் நூற்றாண்டின் தங்க நாணயம் உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது 7ஆம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியுள்ளது.

7ஆம் கட்ட அகழாய்வு பணியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். தொல்லியல் துறையினர், பணியாளர்கள் உதவியுடன் நாளை (திங்கள்கிழமை) முதல் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

ஆய்வின் போது அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்த உள்ளனர். குறிப்பாக பூமிக்குள் ஊடுருவி செல்லும் கருவியையும், கரிம பொருட்களை கண்டறிய பீட்டா என்ற கருவியையும் அகழாய்வில் பயன்படுத்த உள்ளனர்.