நெல்லை ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் சரவணனை சிபிசிஐடி காவல் துறையினர் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் காதல் விவகாரத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியரான கவின் கடந்த மாதம் 27ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடையதாக கவின் காதலித்த இளம்பெண்ணின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில், வழக்கை 8 வாரங்களுக்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி காவல் துறையினர், சுர்ஜித் மற்றும் சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
மனு விசாரணைக்கு வந்த போது, இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனுதாரர் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும் இவ்வழக்கில் முன்னாள் காவலரான சரவணன் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும் வாதிடப்பட்டது. வழக்கின் நோக்கம் கருதியே சிபிசிஐடி காவல் கேட்பதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், சுர்ஜித் மற்றும் சரவணனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினருக்கு அனுமதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் விசாரணைக்காக சிபிசிஐடி காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
விசாரணைக்குப்பின் நாளை மாலை 6 மணிக்குள் அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.