CM Stalin Rahul gandhi CM Stalin Rahul gandhi
தமிழ்நாடு

கட்டபொம்மன்.. எட்டப்பன்.. ராகுல் எச்சரிக்கை! ஸ்டாலினின் அதிரடி பதில்!

மக்களவை தொகுதி எண்ணிக்கை உயர்வு: ஜனநாயகத்துக்கு ஆபத்து என ராகுல் குற்றச்சாட்டு!

PT WEB

தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து, INDIA கூட்டணித் தலைவர்கள் ஸ்டாலினை சந்திக்க சென்னைக்கு வருகிறார்கள். ராகுல் காந்தி, மசோதா இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து என எச்சரித்தார். ஸ்டாலின், திமுக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மட்டுமே செயல்படும் எனவும், எட்டப்பன்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே வரலாறு நினைவுகூரும் எனவும் கூறினார்.

செய்தியாளர் - M.மீரா

நவம்பர் 27ஆம் தேதி பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை, அரசியலமைப்புச் சட்டத்தின் 132-வது திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான இரண்டாவது மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களுக்கு ஆதரவளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வது தொடர்பாக மத்திய அரசு கொண்டுவர உள்ள மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக INDIA கூட்டணித் தலைவர்கள் இன்று சென்னைக்கு வருகின்றனர்.

mk stalin

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது X தளத்தில், மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களை திமுக எதிர்க்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்காக இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் சென்னைக்கு வந்து ஸ்டாலினைச் சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது இந்திய ஜனநாயகத்தையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்றும், இதன் மூலம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தங்களுக்குச் சாதகமாகத் தேர்தல் வரைபடத்தை மாற்றியமைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது X தளத்தில், தமிழ்நாட்டின் நலனையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் முதன்மையாகக் கொண்டே திமுக முடிவுகளை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டில் ஒருபோதும் சமரசம் செய்யப்போவதில்லை என்றும், வரலாறு தங்களை கட்டபொம்மன்களாகவே நினைவுகூரும், எட்டப்பன்களாக அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.