கத்திப்பாரா
கத்திப்பாரா pt web
தமிழ்நாடு

மேலே மேம்பாலம்.. கீழே உற்சாகம் ததும்பும் பொழுதுபோக்கிடம்.. மக்களைக் கவரும் கத்திப்பாரா பூங்கா

Angeshwar G

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் கத்திப்பாரா மேம்பாலப் பகுதி தற்போது மாநகர மக்களின் சிறந்த பொழுதுபோக்குத்தலமாகவும் மாறியுள்ளது. கத்திப்பாரா பாலத்திற்கு கீழ் 2 ஆண்டுகளுக்கு முன் பொழுதுபோக்கு அம்சங்களுடன் நகர்ப்புற சதுக்கம் திறக்கப்பட்டது. uptown என்று அழைக்கப்படும் இந்த சதுக்கம் இரவு நேரங்களில் மக்கள் கூடும் முக்கியமான Hangout ஸ்பாட்களில் ஒன்றாகியிருக்கிறது.

இரவு 11 மணிக்கு கூட இங்கு மக்கள் கூட்டத்தை பார்க்க முடிகிறது. குழந்தைகள், நண்பர்கள் என நேரத்தை செலவிடுவதற்கு தகுந்த இடமாக நகர்ப்புற சதுக்கம் திகழ்வதாகக் கூறுகிறார்கள் அங்கு வரும் மக்கள்.

குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகள் கிடைப்பதும் காற்றோட்டமான சூழலும் குடும்பங்களை இங்கு கவர்ந்திழுக்கின்றன. அலுவலகம் முடிந்து இங்கு வந்து ஒரு மணி நேரம் கழித்து புத்துணர்வோடு அடுத்த நாளை தொடங்குவதாகவும், இங்கு வரும் இளைஞர்களை பார்க்கும் போது உற்சாக உணர்வும் கிடைப்பதாகவும் சொல்கிறார்கள்.

பிரபல உணவகங்களின் கடைகள் இங்கு உள்ள நிலையில் குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் உள்ளது. சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் போன்றவை குழந்தைகளை குதூகலிக்க வைக்கின்றன. சாதாரண நாட்களில் தினசரி 150 பேரும் விடுமுறை நாட்களில் 300 பேர் வரையும் இங்கு வருகின்றனர்.

வார இறுதி நாட்களில், புத்தகக் கண்காட்சி, இசை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. வேகமான நகரமயமாக்கல், நெருக்கடியான வேலை, சுழற்சி முறையிலான பணிநேரம் என அழுத்தம் நிறைந்த சூழலிருந்து விடுபட்டு மனதிற்கும் உடலிற்கும் புத்துணர்வு அளிக்க நகர்ப்புற சதுக்கம் சிறந்த வாய்ப்பாக விளங்குகிறது.