தமிழ்நாடு

ஓ.என்.ஜி.சி.யால் கதிராமங்கலம் கிராமத்திற்கு பாதிப்பு இல்லை: அதிகாரிகள் விளக்கம்

webteam

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கதிராமங்கலம் கிராமத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், மீத்தேன், ஷேல் வாயுவை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எடுக்கவில்லை என்றும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

கும்பகோணத்தில் செய்திய‌ளர்களை ‌சந்தித்த ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர் ராஜேந்திரன், காரைக்கால் அசெட் மேலாளர் குல்பீர் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தத் தகவலை தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய ராஜேந்திரன், கதிராமங்கலம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடர்ந்து செயல்படும் என்றும், எண்ணெய் வளங்கள் இருக்கும் இடத்தில் புதிய கிணறுகள் அமைக்கப்பட்டு கச்சா எண்ணெய் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கதிராமங்கலம் கிராம மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் விவசாய நிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் ஆண்டுதோறும் இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய் அந்நிய செலாவணி செலவீனங்கள் மிச்சப்படுத்தப்படுகிறது என்றும், ஓ.என்.ஜி.சி. மக்களுக்காகவே செயல்படும் நிறுவனம் என்றும், சமூக வலைதளங்களிலும் மற்றும் சிலர் பரப்பும் வதந்திகளையும் மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் மேலாளர் ராஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக ஓ.என்.ஜி.சி. விழிப்புணர்வு பிரச்சாரக் குறுந்தகடை காரைக்கால் அசெட் மேலாளர் குல்பீர் சிங் வெளியிட, அதனை சென்னை பேசின் மேலாளர் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். இந்த குறுந்தகடு காரைக்கால் பண்பலையில் ஒளிபரப்பப்படும்.