திமுக ஆன்மிக பாதையில் செல்லவில்லை எனவும், எப்போதும் பயணிக்கும் பாதையில் தான் செல்கிறது எனவும் வேலூர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் நின்ற திருக்கோலத்தில் காட்சியளித்து வரும் அத்திவரதரை தரிசத்த பின் அவர் இவ்வாறு கூறினார். நாடாளுமன்ற திமுக குழுவின் துணைத் தலைவர் கனிமொழி, வேலூர் தேர்தல் பரப்புரையில் பங்கேற்காதது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மக்களவைக் கூட்டத்தொடரில் கனிமொழி பங்கேற்றதால் அவரால் வேலூர் பரப்புரையில் ஈடுபட முடியவில்லை எனக் கதிர் ஆனந்த் கூறினார். எனிலும் அவர் கட்சியின் தேர்தல் நிர்வாகிகளுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கிக்கொண்டு தான் இருந்தார் என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் புதிய தலைமுறைக்கு பேட்டி கொடுத்தார். அப்போது பேசிய அவர், “திமுகவில் உட்கட்சி பூசல் உள்ளது. விரைவில் அது வெடிக்கும். வேலூர் தேர்தலில் கனிமொழி பரப்புரை செய்யாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.