காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகை திருட வந்தவர் என நினைத்து சகமீனவர்களே, ஒரு மீனவரை அடித்து கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை காசிமேடு இந்திரா நகரை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் சதீஷ்குமார், ஐயப்பன் மற்றும் ராஜா. இவர்கள் சினிமா பார்த்து விட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் வழியாக சென்றுள்ளனர். அப்போது அற்புதம் என்பருக்கு சொந்தமான படகில் ஒருவர் படுத்திருப்பதை கண்டுள்ளனர். அவரை யார் என்று தெரியதால், யார் நீ? என அந்த நபரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த நபர் மது அருந்திவிட்டு இருந்ததால், சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபரை படகை விட்டு வெளியேறுமாறு மூன்று பேரும் கூறியுள்ளனர்.
ஆனால் படகை விட்டு வெளியேற மறுத்துவிட்டு, அந்த நபர் அங்கேயே படுத்திருந்துள்ளார். இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாய் மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் அந்த நபரை தாக்கியுள்ளனர். அத்துடன் அருகாமையில் இருந்த கட்டையை எடுத்தும் அந்த நபரை அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த நபர், சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்துபோனார். இதனால் பதட்டமடைந்த 3 பேரும், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து படகில் சடலமாக கிடந்த நபர் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காசிமேடு துறைமுக காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபரை கொலை செய்தது சதீஷ்குமார், ஐயப்பன் மற்றும் ராஜா என்பது தெரியவந்தது. அத்துடன் கொலை செய்யப்பட்ட நபர், காசிமேடு சிஜி காலனியை மீனவர் ஜெரால்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் காற்று வாங்க காசிமேடு பகுதியில் இருந்த படகில் வந்த படுத்து அவர் உறங்கியுள்ளார். அந்த சமயத்தில் தான் இந்த பிரச்னை ஏற்பட்டு அவருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு மீனவரை சக மீனவர்களே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.