கரூர் தவெக பரப்புரை Pt web
தமிழ்நாடு

கரூரில் 41 பேர் மரணத்துக்கு விஜயும் காரணம்.. அதிமுக பகிரங்க குற்றச்சாட்டு.!

கரூரில் 41 பேரின் மரணத்திற்கு விஜய்யும் காரணம் தானே என்று அதிமுக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது.

PT WEB

தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்று, நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் அதிமுகவினர் பாஜகவிடம் நேரடியாக சரணடைந்துவிட்டதாக விமர்சித்திருந்தார். அதிமுகவை கட்சி தொடங்கியிலிருந்து விமர்சிக்காமல் இருந்து வந்த தவெகவினர். நேற்றைய, கூட்டத்தில் அதிமுகவை விமர்சித்திருந்தது பேசுபொருளாகியிருந்தது. இந்தநிலையில் தான், கரூரில் 41 பேரின் மரணத்திற்கு விஜய்யும் காரணம் தான் அதிமுக தரப்பிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”'மத்திய அரசிற்கு அடிமை' என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு.

கருரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை ? அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை. உலக வரலாற்றிலேயே முதல்முறையாக இறந்தவர்களின் உறவினர்களையெல்லாம் பனையூர் வரவைத்து ஆறுதல் வாங்கிச் செல்ல வைத்தது எல்லாம், வேற லெவல் பண்ணையார்தனம். இதற்காக உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.

எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய்

கரூரில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சியில், குற்ற உணர்வு சிறிதுமின்றி தன்னை சுய விளம்பரம் செய்துகொண்ட தற்பெருமை குணம் மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம்” எனவும் காட்டமாக விமர்சித்துள்ளது.

தொடர்ந்து, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜயாகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி எனவும் விமர்சித்திருக்கிறது.