கரூரில் திமுகவினர் நடத்திய மக்கள் கிராமசபை கூட்டத்தில் அதிமுக, திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து திமுகவினர் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் முழுவதும் 'அதிமுகவை நிராகரிப்போம்' என்ற தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்திலுள்ள தரகம்பட்டியில் திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டம் நடைபெற்று நிறைவுறும் தருவாயில் அங்குவந்த அதிமுகவினர் சிலர் திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தள்ளுமுள்ளும் கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் கைகளால் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர்.
அதிமுகவினரின் அத்துமீறலை கண்டித்து திமுகவினர் தரகம்பட்டியில் சிறிதுநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் முழுவதும் திமுகவினரின் மக்கள் கிராமசபை கூட்டம் அமைதியாக நடைபெற்று வரும் நிலையில் தரகம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிமுக வினர் திமுகவினர் இடையே கைகலப்பு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.