ப்ளூவேல் விளையாட்டு அபாயத்தில் இருந்து கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவர் மீட்கப்பட்டுள்ளார்.
கரூர் அருகில் உள்ள வேலாயுதம்பாளையம் நடையனூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் கடந்த சில தினங்களாக புளூவேல் விளையாட்டை விளையாடியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் சக மாணவர்கள் அளித்த தகவலின்பேரில் மாணவர் அடையாளம் காணப்பட்டார். தனது உள்ளங்கையை கீறி காயப்படுத்திக் கொண்ட நிலையில் இருந்த அவரை அழைத்துப் பேசிய ஆசிரியர்கள் வேலாயுதம்பாளையம் காவல்நிலைத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கரூரில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து மாணவருக்கு முதல் கட்ட உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஏற்கனவே இந்த விளையாட்டுக்கு மதுரையில் ஓரு இளைஞர் பலியாகிவிட்ட நிலையில், விபரீதங்களை தடுக்க பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு அவசியமாகிறது. இதனிடையே ப்ளூவேல் விளையாட்டின் விபரீதம் குறித்து மதுரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மருத்துவ அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், ப்ளுவேல் விளையாட்டால் ஈர்க்கப்பட்டு அதனை விளையாடத் தொடங்கும் மாணவர்கள் அதிலிருந்து வெளியேறுவது, அவர்களை மீட்பது, விளையாட்டின் ஆபத்துகளை உணர்த்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.