vijay, Amit Shah pt web
தமிழ்நாடு

கரூர் கூட்டநெரிசல் | களமிறங்கும் பாஜக; விஜயை கூட்டணிக்கு கொண்டு வர முயற்சி? டெல்லியின் கணக்கு என்ன?

கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சட்ட நடவடிக்கைகள் தரும் அழுத்தத்தை முன்வைத்து தவெகவைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக இறங்கியிருப்பதாக தெரிகிறது.

PT WEB

கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சட்ட நடவடிக்கைகள் தரும் அழுத்தத்தை முன்வைத்து தவெகவைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக இறங்கியிருப்பதாக தெரிகிறது. இதை அறிந்தே விஜயுடன் செல்பேசியில் பேசினார் ராகுல் என்று சொல்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

தவெக விஜய்

கரூரில் தவெக தலைவர் விஜய் பேசிய கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர வைத்துள்ளது. ஒருபுறம் “இப்படி கண்மூடித்தனமாக மக்கள் கூடலாமா; அப்படியே மக்கள் கூடினாலும், அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே யோசித்து எடுக்க வேண்டும் இல்லையா?” என்பதான கேள்விகள் எல்லாம் பலராலும் எழுப்பப்பட்டாலும், முறையாக கூட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைக்காத தவெக நிர்வாகிகள் மீது அனைத்து தரப்பினராலுமே குற்றஞ்சாட்டப்படுகிறது.

குறிப்பாக தவெக தலைவர் விஜய் உரிய நேரத்துக்கு நிகழ்ச்சி நடக்குமிடத்துக்கு வராததும், இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கும் சூழலிலும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல், கையோடு கரூரிலிருந்து சென்னை திரும்பியதும், விஜய் மீது கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளன. இத்தகு சூழலில், தமிழக அரசு பதிந்துள்ள வழக்குகளும், நியமித்துள்ள விசாரணை ஆணையமும் தவெகவுக்கு நெருக்கடியாக மாறும் என்று சந்தேகிக்கின்றது தவெக தரப்பு.

இரு நாட்களாகவே தவெக தலைவர் விஜய் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்கலாம் எனும் தகவல்கள் நிலவிவந்தன. இந்நிலையில், விஜயின் பிரதிநிதிகள் குருமூர்த்தியைச் சந்தித்ததாகவும், விரைவில் விஜயும் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பத்தகுத்த வட்டாரங்கள் கூறின. ஆனால், இந்தச் செய்தியை ஆடிட்டர் குருமூர்த்தி மறுத்தார். எப்படியாயினும், திமுக - தவெக இடையேயான யுத்தத்தை கரூர் சம்பவம் மேலும் அழுத்தத்துக்குள்ளாகியுள்ள நிலையில், டெல்லி இந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆட்டத்தில் இறங்கியுள்ளதை அறிய முடிகிறது.

அண்ணாமலை

கரூர் விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே தமிழக அரசிடமிருந்து தன்னுடைய உள்துறை அமைச்சகம் மூலமாக அறிக்கை கேட்கச் சொன்னார் அமித் ஷா. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தவெக அணுகும் முன்னரே இது நடந்தது. தொடர்ந்து, ஆளுநரும் தமிழக அரசிடமிருந்து இந்த சம்பவம் தொடர்பாக விவரங்களை கேட்டார். முன்னதாக கரூர் விவகாரம் தொடர்பாக பேசிய தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையும் சரி; இன்றைய தலைவர் நயினார் நாகேந்திரனும் சரி; தமிழக அரசையே கடுமையாக சாடினர்..

இதனூடாகவே, தேசிய மனிதவுரிமை ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்; சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் தவெக முன்னணி தலைவர்களில் ஒருவரும் பாஜகவில் முன்பு இருந்தவருமான நிர்மல் குமார்.

கரூர்

திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இது தொடர்பாக தொடக்கம் முதலாகவே தவெகவை முயற்சித்தும் வந்தது. ஆனால், விஜயோ திமுகவையும் பாஜகவையும் ஒரே நேர்கோட்டில் வைத்து விமர்சித்து வந்தார்; பாஜகவை கொள்கை எதிரி என்றும் திமுகவை அரசியல் எதிரி என்றும் வரையறுத்தார். இப்படிப்பட்ட சூழலில் விஜய்க்கான நெருக்கடி சூழலை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அடுத்தடுத்த காய் நகர்த்தல்கள் டெல்லியில் ஆரம்பித்துவிட்டன. இதை அறிந்துகொண்டுதான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினோடு பேசிய கையோடு விஜயோடும் பேசியிருக்கிறார் என்கின்றன நம்முடைய டெல்லி வட்டாரங்கள்!