செய்தியாளர்: வி.பி. கண்ணன்
கரூர் மாவட்டம் தோகைமலை, குளித்தலை, பேட்டைவாய்த்தலை ஆகிய இடங்களில் தனியார் சிலர் சேர்ந்து ஏலச் சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏலச் சீட்டில் சேர்த்து அவர்களிடமிருந்து பல கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏலச் சீட்டு நிறுவனத்தை நடத்திய நபர்கள் பொதுமக்களிடமிருந்து வசூலித்த பணத்தை திருப்பித் தராமல் சில மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இதையடுத்து ஏலச் சீட்டு நடத்தி தங்களிடம் வசூலித்த பணத்தை திருப்பித்தராமால் தலைமறைவான நபர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து பணத்தை மீட்டுத்தரக் கோரி மனு அளித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.