கரூர் மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் உணவு தேவைப்படுவோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக உணவு வழங்க திட்டமிடப்பட்டு, உணவு தேவைப்படுவோர் 9498747614, 9498747699 என்ற எண்களில் தொடர்பு கொண்டால் அவர்களின் வீடுகளுக்கே சென்று இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் உள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பு இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இன்று ஒரே நாளில் 3,307 நபர்கள் உணவு தேவை என்று தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கான உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
ஊரடங்கு காலம் முழுவதும் 3 வேளையும் உணவு தேவைப்படும் நபர்கள் ஒருமுறை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஊரடங்கு முடியும் வரை 3 வேளை உணவு தேவை என்ற விபரத்தை தெரிவித்தால் அவர்களுக்கு ஊரடங்கு காலம் முடியும் வரை உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.