தமிழ்நாடு

கரூர்: வயதான மாமனார் மாமியாரை வெளியேற்றிய மருமகள் - வீட்டை பூட்டிச் சென்ற அவலம்

கரூர்: வயதான மாமனார் மாமியாரை வெளியேற்றிய மருமகள் - வீட்டை பூட்டிச் சென்ற அவலம்

kaleelrahman

கரூரில் வயதான மாமனார் மாமியாரை வெளியேற்றி வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்ற மருமகளின் செயலால் இருவரும் வீட்டுக்கு வெளியே தங்கி உள்ளனர். கடந்த 10 நாட்களாக மழையிலும் வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கரூர் அருகே உள்ள திருமுடிக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் கந்தசாமி (70). இவருக்கு குப்பாயி என்ற மனைவி உள்ளார். இவர்களின் மகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்ட நிலையில், மருமகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், குப்பாயிக்கு கால் உடைந்தது. இதையடுத்து கந்தசாமியும் குப்பாயியும் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்னர் திருமுடிகவுண்டனூருக்கு இருவரும் திரும்பி வந்தனர். அப்போது அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மருமகள் சுதா வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டுக்கு வெளியே உள்ள சிறிய சமையல் அறையில் தங்கியுள்ளனர்.

இதுகுறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், கோட்டாட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறும் கந்தசாமி, அந்த வீடு தனக்குத்தான் சொந்தம் என்றும் கூறுகிறார். மேலும், தனது பெயரில் தான் உள்ளது என்றும் மருமகளுக்கு உரிய பாகப்பிரிவினை செய்து கொடுக்க சம்மதம் தெரிவித்து இருந்தாலும் வயதான தனது மனைவி படுக்க இடமில்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.