தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில், ஆதவ் அர்ஜூன் திமுகவின் செயல்பாடுகளை கண்டித்து, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் சமூக நீதி குறித்து பேசினார். அவர், திமுகவின் மிரட்டலுக்கு பயப்படாமல், மாற்றத்தை கொண்டு வர விஜய் முன்வருவார் என நம்பிக்கை தெரிவித்தார். கரூர் சம்பவத்தில் திமுகவினர் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு கண்டனம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில், ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெறவேண்டும் என்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜேசிடி பிரபாகரன், வி்.எஸ் பாபு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து இன்னும் நிறைய பேருக்கு புரியல. இத பத்தி பேசிய தலைவர்கள் எல்லாம் இன்றைக்கு அமைதியாக இருக்கிறார்கள். முக்கியமாக இந்த சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதி அடிப்படையில் உருவாகிய நீதிக் கட்சி 1921-ல் முதல்முறையா வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை பாஸ் பண்ணினார்கள்.
சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒரு போராட்டமாக இந்தியாவில் முதல் முறையில் ஒலித்த மாநிலம் தமிழ்நாடு. இங்கிருந்து அதற்கான GO வை பாஸ் செய்தது. பெரியார் அவர்கள் உருவாக்கிய போராட்டம் மூலமாக மத்தியஅரசு செவி சாய்த்து அன்றைக்கு முதல் முதலில் அரசியலமைப்பை திருத்தம் செய்தது. அரசியலமைப்பில் முதன்முதலில் திருத்தத்தை உருவாக்கிய மண் நம்முடைய தமிழ்நாடு” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு கரூர் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்படுவார்கள். எம்ஜிஆருக்கு பிறகாக ரஜினி அரசியலுக்கு வர முயன்றார். ஆனால் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து ரெட்ஜெயின்ட் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். ஆனால் இவற்றை எல்லாம் கடந்து திமுகவுக்கு எதிராக விஜய் நிற்கிறார் என்றால் விஜய்க்கு மன வலிமை அதிகம். மாற்றத்தை கொண்டு வருவோம் என்று தனித்து போட்டியிட்டு வந்த வைகோ, திமுகவுடன் கூட்டணி வைத்தார். இன்றைக்கு அந்தக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நான்கு தொகுதியில் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று கூறிய கமல்ஹாசன் டிவி எல்லாம் உடைத்தார், கடைசியில் திமுக கூட்டணியில் இணைந்து விட்டார். மூன்று முறை முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து விட்டார். ஆனால் நம்முடைய தலைவர் மட்டும்தான் மன உறுதியுடன் களத்தில் நிற்கிறார்” என பேசினார்.