Karur Incident: Pendrive and Printed Papers Shredded and Burned Behind SIT Office – Tension Prevails pt web
தமிழ்நாடு

கரூர் சம்பவம் | கிளம்பிய அடுத்த புயல்.. எரிக்கப்பட்ட பேப்பர்கள் & PenDrive.. CBI-ன் அடுத்த மூவ்..!

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க குஜராத்தை சேர்ந்த SP பிரவீன் குமார் தலைமையில் ASP முகேஷ் குமார் DSP ராமகிருஷ்ணன் மற்றும் இரண்டு CBI அதிகாரிகள் கரூர் வந்துள்ளனர்.

PT WEB

கரூர் சம்பவம் தொடர்பாக, SIT விசாரணை மேற்கொண்டு வந்த அலுவலகத்தின் பின் புறம் 32 GB Pendrive-உடன் பிரிண்ட் செய்யப்பட்ட பேப்பர்கள் இயந்திரம் மூலம் கிழிக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக தவெக மற்றும் அரசு தரப்பு என இருவரும் மாறி மாறி குறை கூறி வந்தனர். பிறகு உயர்நீதிமன்றத்தின் கருத்து தவெக தரப்புக்கு பேரிடியை இறக்கியது மட்டுமில்லாமல், வடக்கு மண்டல IG அஸ்ரா கார்க் தலைமையில் SIT எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரித்து வந்தனர். அதே சமயத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தும் விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

41 people killed in Karur stampede

Flight Mode-ல் இருந்த தவெக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு சற்று Active-ஆக தொடங்கியுள்ளனர். உயர்நீதிமன்றம் அமைத்த SIT மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பு உட்பட பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவின் அடைப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான SIT அமைத்து அதன் கீழ் CBI விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க குஜராத்தை சேர்ந்த SP பிரவீன் குமார் தலைமையில் ASP முகேஷ் குமார் DSP ராமகிருஷ்ணன் மற்றும் இரண்டு CBI அதிகாரிகள் கரூர் வந்துள்ளனர்.

கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள CBI அதிகாரிகள் சம்பவம் குறித்து வேலுச்சாமிபுரத்தில் விசாரணை நடத்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கரூர் டவுன் காவல் துறையினரிடம் பாதுகாப்பும் கோரியுள்ளனர்.

முதலில் விசாரணை அதிகாரியாக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட கரூர் மாவட்ட ADSP பிரேம் ஆனந்தன் 680 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அஸ்ரா கார்க் தலைமையிலான SITயிடம் ஒப்படைத்தார். SIT அடுத்த கட்டமாக விசாரணையை துவங்கிய பிறகு 1000க்கும் மேற்பட்ட பக்கங்களை தற்போது CBI வசம் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில் நடந்த விஜய் பரப்புரை, அஸ்ரா கார்க்

SIT இதுவரை சேகரித்த தடயங்கள், ஆதாரங்கள், ஆவணங்கள் என அனைத்தையும் நீதிமன்றத்தில் ஒரு நகலையும் மற்றொரு நகலை CBI வசமும் கொடுத்துள்ளனர். பிரவீன் குமார் தலைமையிலான CBI அதிகாரிகள் ஆவணங்களை பொதுப்பணித்துறை நீர்வளத் ஆதாரத்துறை திட்ட இல்லத்தில் நேரில் வந்து பெற்றுக்கொண்டனர்.

இந்த அலுவலகத்திற்கு பின்புறம் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் போது, பிரிண்ட் செய்யப்பட்ட பேப்பர்கள் இயந்திரம் மூலம் கிழித்து எரிக்கப்பட்டுள்ளது. எரிக்கப்பட்ட பேப்பர்களுக்கிடையில் 32Gb Pendriveவும் கிடந்தது. இவைகள் எரிந்த நிலையில் கிழிந்த நிலையிலும் சிதறி கிடந்தன. செய்தியாளர்கள் அதனை காட்சிப்படுத்தியதால் உடனடியாக சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்த காவலர் ஒருவர் வந்து அந்த Pendriveவை எடுத்து சென்றார்.

சிறப்பு புலனாய்வு குழுவினர் பிரிண்ட் செய்யப்பட்ட பேப்பர்களை எரித்தும் கிழித்தும் போட்டடுள்ளனர். இந்த பென்டிரைவ் எதற்காக எரிக்கப்பட்ட பேப்பர்களோடு கிடந்தது அதனை செய்தியாளர்கள் படம் பிடித்த பிறகு மீண்டும் வந்து எடுத்துச் சென்றது ஏன் என்று அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Karur Incident: Pendrive and Printed Papers Shredded and Burned Behind SIT Office – Tension Prevails

அதே சமயத்தில், அதிகப்படியான அல்லது சரியாக அச்சிடப்படாத கூடுதல் பிரதிகளை இயந்திரம் மூலம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தீயிட்டு அழிப்பது வழக்கம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.