senthilbalaji, ed
senthilbalaji, ed pt web
தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் பூட்டை உடைத்து அமலாக்கத்துறையினர் சோதனை! கரூரில் பரபரப்பு

Angeshwar G

செந்தில் பாலாஜியின் சகோதரர் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 13 மணி நேர அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அலுவலகத்தை சீல் வைத்தனர். இந்நிலையில், இன்று இரண்டாம் முறையாக கரூரில் நான்கு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

குறிப்பாக கரூர் மதுரை புறவழிச்சாலையில் உள்ள அம்பாள் நகரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவர் வீட்டிலும், செங்குந்தபுரத்தில் சங்கரின் நிதி நிறுவனத்திலும் சோதனை நடத்துகின்றனர். சங்கர் கரூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறார். அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அமலாக்கத்துறையினர் சென்ற போது வீடு பூட்டி இருந்துள்ளது.

இதன் காரணமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரம் காத்திருந்தனர். இதன் பின் வீட்டின் உரிமையாளர் நேமநாதன் என்பவரை வரவழைத்தனர். அவரிடம் மாற்று சாவி குறித்து கேட்ட போது அவர் தன்னிடம் இல்லை என கூறியதால் அவர் முன்னிலையில் பூட்டை ரிப்பேர் செய்யும் நபரை வரவழைத்தனர். அதன் பிறகே உள்ளே சென்ற அமலாக்கத்துறையினர் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அது மட்டுமின்றி சின்னாண்டான் கோயில் பகுதியில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ் கடை மற்றும் அதன் உரிமையாளர்களில் ஒருவரான பிரகாஷ் என்பவரின் வீடு ஆகிய இடங்களிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிரகாஷ் என்பவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் மார்பில் கடையை கரூரில் நடத்துகிறார். இவர் கரூர் மட்டுமல்லாது காங்கேயம், தர்மபுரி இடங்களிலும் மார்பில் கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அதிக அளவில் இவர்கள் ரியல் எஸ்டேட் துறையிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

மார்பில் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் மூலம் பெரிய அளவில் நிலத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்களையும் அமலாக்கத்துறையினர் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.