அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு pt desk
தமிழ்நாடு

கரூர்: கனமழை காரணமாக அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: வி.பி. கண்ணன்

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அமராவதி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாராபுரம் தடுப்பணையில் இருந்து நேற்று பிற்பகலில் 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று நள்ளிரவு கரூர் நகரப்பகுதி அமராவதி ஆற்றில் வந்து சேர்ந்தது.

அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

இன்று காலை நிலவரப்படி கரூர் நகரில் உள்ள சின்னாண்டங் கோயில் தடுப்பணைக்கு 75 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த தண்ணீர் அப்படியே அமராவதி ஆற்றில் சென்று திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியில் கலப்பதால் மாயனூரில் உள்ள காவிரி தடுப்பணை நிரம்பியுள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 38 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுகிறது.

தொடர்ந்து அமராவதி மற்றும் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அமராவதி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் குளிக்கவோ, ஆடு மாடுகளை குளிப்பாட்டவோ, செல்ஃபி எடுக்கவோ ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வருவாய்த் துறையினர் அமராவதி நதிக்கரையோரம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.