தமிழ்நாடு

என்ன ரூ.2.92 லட்சமா..? கூலித்தொழிலாளிக்கு 'ஷாக்' கொடுத்த மின் கட்டணம்..

webteam

மின்சாரம் மட்டுமே இதுநாள் வரை "ஷாக்" அடித்து வந்த நிலையில், தற்போது மின் கட்டணம் "ஷாக்" கொடுத்த சம்பவம் கரூரில் நிகழ்ந்துள்ளது. கூலித் தொழிலாளியின் சின்னச்சிறு வீட்டின் மின் கட்டண தொகை, குடும்பத் தலைவியை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கரூர் மாவட்டம் செல்லாண்டிபாளையம் தட்டான்காடு பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன். கூலித்தொழில் செய்யும் இவருக்கு 2 சிறிய வீடுகள் சொந்தமாக உள்ளன. இரண்டு வீடுகளுக்கும் தனித்தனி மின் இணைப்புகளும் உள்ளன. 100 யூனிட்டிற்குள் மின் பயன்பாடு இருந்தால் மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என்பதால் வீரப்பன் இதுவரை மின்கட்டணமே செலுத்தியதில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மின்வாரிய அலுவலத்திற்குச் சென்று இந்த மாதம் மின்கட்டணம் குறித்து வீரப்பன் விசாரித்துள்ளார். ஒரு வீட்டிற்கு மின் கட்டணம் செலுத்த தேவையில்லை எனக் கூறிய அதிகாரிகள் மற்றொரு வீட்டிற்கு 2 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் எனக் கூறி அதிர்ச்சியளித்துள்ளனர். மேலும், அதனை பணமாக செலுத்துகிறீர்களா அல்லது காசோலையாக செலுத்துகிறீர்களா என அதிகாரிகள் கேட்டதாகவும் அதனைக் கேட்டு மிரட்சியில் அசைவற்று போயுள்ளார் வீரப்பன்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் வீரப்பன் முறையிட்டபோது, எண்களை கணினியில் பதிவு செய்யும்போது புள்ளி வைக்காமல் இருந்தால் இதுபோன்ற தவறுகள் ஏற்படுவதாகக் கூறியுள்ளனர். எங்கு தவறு நேர்ந்தது என்பது குறித்து விசாரிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல், அதே பகுதியில் உள்ள வீரராசு என்பவர், வழக்கமாக 500 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில், இந்த மாதம் 4 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தியதாக கூறியுள்ளார். சில அதிகாரிகள் செய்யும் குளறுபடி பலருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக செல்லாண்டிபாளையம் தட்டான்காடு பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.