தமிழ்நாடு

கருணாநிதி வீடு திரும்புவார் : குலாம் நபி நம்பிக்கை

கருணாநிதி வீடு திரும்புவார் : குலாம் நபி நம்பிக்கை

webteam

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என நம்புவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு இன்று காலை வந்த அவர், மருத்துவர்களை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு என கேள்விப்பட்டதும், சோனியா மற்றும் ராகுல் அறிவுரைப்படி அவரை சந்தித்து நலம் விசாரிக்க வந்ததாக தெரிவித்தார்

கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை பார்க்க யாருக்கும் அனுமதியில்லை என்பதால் சிகிச்சை விபரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதாக கூறினார். மேலும் கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் அவரது குடும்பத்தினர் திருப்தியோடு இருப்பதாகவும் , கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் விரைவில் வீடு திரும்பி தனது அரசியல் பணிகளை புரிவார் என தான் நம்புவதாகவும் கூறினார். 

பின்னணி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று காரணமாகவும் வயதின் காரணமாகவும் கருணாநிதி உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக தொற்று காரணமாக ஏற்பட்ட காய்ச்சலுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து 4 மருத்துவர்கள் கொண்ட குழு நேற்று இரவு கருணாநிதியின் இல்லத்திற்கு வந்து உரிய முதலுதவிகளை செய்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.