தமிழ்நாடு

கருணாநிதி உடல் நிலை எப்படி இருக்கிறது? - புகைப்படம் சொல்லும் தகவல்கள்

கருணாநிதி உடல் நிலை எப்படி இருக்கிறது? - புகைப்படம் சொல்லும் தகவல்கள்

webteam

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பது, காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் தெளிவாகியுள்ளது.

உடல் நலக் குறைவு காரணமாக கருணாநிதி  காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று காரணமாகவும் வயது முதிர்வு காரணமாகவும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னை வந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, காவேரி மருத்துவமனை சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த புகைப்படங்கள் இன்று வெளியானது. அந்தப் படத்தில் வெங்கையா நாயுடு உடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் இருந்தனர். படத்தில் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் சிகிச்சை தொடர்பான மானிட்டரும் இருந்தது. அதில் சிகிச்சை தொடர்பான சில அளவீடுகளும் இருந்தன.

அதன்படி, கருணாநிதியின் இதயத் துடிப்பு 94 என்ற அளவில் உள்ளது. வயதானவர்களுக்கு சராசரியாக இதயத்துடிப்பு 72ல் இருந்து 100 வரை இருக்கும். இதேபோல் கருணாநிதிக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 97 என்ற ‌‌அளவில் இருக்கிறது. இதன் சராசரி 90 முதல் 100 வரை இருக்கும். எனவே ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவும் அவருக்கு சீராக இருக்கிறது. மூச்சு வீடும் அளவு நிமிடத்திற்கு 30 என்ற அளவில் இருக்கிறது. இதுவும் சராசரியாக இருப்பது தெரியவந்துள்ளது. கருணாநிதிக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படவில்லை என்பது புகைப்படம் மூலம் தெரியவருகிறது.

அளவீடுகளின் விவரம்:-

இதயத்துடிப்பின் சராசரி (pulse rate) - 94 ( கருணாநிதி போன்ற வயது முதியோருக்கு சராசரி 72-100)

ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு (oxygen saturation) - 97

சுவாச விகிதம் (respiratory rate)  - 30 ( வயது முதியோருக்கு இது ஓரளவு சராசரி அளவுதான்)