தமிழ்நாடு

2 டன் வெண்கலம் -16 அடி உயரம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை நாளை திறப்பு

ச. முத்துகிருஷ்ணன்

 “நீண்ட தூரம் இந்த தமிழினத்துக்காக ஓடியவர் கலைஞர் அவர்கள். அவரை அதிக உயரத்தில் உயர்த்திப் பார்ப்பதைத் தனது கடமையாகக் கருதுகிறது தமிழ்நாடு அரசு” என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் (16 அடி) அமைக்கப்பட்ட கருணாநிதி சிலையை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நாளை மாலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிலையை திறந்து வைக்க உள்ளார்.

கடந்த ஏப்ரல் 26-ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திருவாரூரில் முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும். ஜூன் 3 அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும் என்பதையும் அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று அறிவித்தார்.

இதையடுத்து ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சிலை அமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சிலையை வடிவமைக்கும் பணிகள் மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் நடைபெற்றது.

சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்தார். இவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட அவருடைய முழு உருவச்சிலையை வடிவமைத்தவர் ஆவார். இதையடுத்து தமிழகத்தில் மட்டும் தற்போது 20-க்கும் மேற்பட்ட கருணாநிதியின் சிலைகளை செய்துக்கொடுத்துள்ளார் சிற்பி தீனதயாளன். அவரிடமே ஓமந்தூரார் தோட்டத்தில் தமிழக அரசு வைக்க உள்ள கருணாநிதியின் சிலைக்கும் பொதுப்பணித்துறை ஆர்டர் கொடுத்தது.

அவரும் 3 டன் களிமண்ணில் மாதிரி சிலையை வடிவமைத்து அதன் புகைப்படம் முதல்வரிடம் ஒப்புதலுக்கு அனுப்பினார். அவரும் ஒப்புதல் அளித்ததை அடுத்து முழுவதும் வெண்கலத்தினால் ஆன சிலையை வடிவமைக்கத் துவங்கினார். முழுவதும் வெண்கலத்தினால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலை போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 16 அடி உயரம் கொண்ட இந்த சிலையை நிறுவ 12 அடி உயர பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிலை வடிவமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டது. தற்போது கருணாநிதிக்கு அமைக்கப்பட்டு உள்ள இந்த சிலையே உலோகத்தினால் செய்யப்பட்ட அதிக உயரம் கொண்ட சிலையாகும். முதலில் அண்ணா சாலையில் சிலையை அமைக்க அரசு தரப்பு திட்டமிட்டது. ஆனால் சரியான இடம் அமையாமல் இருந்துள்ளது.

அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக எதிர்காலத்தில் சிலையை மாற்றும் சூழ்நிலையும் வரலாம் என்பதால் ஓமந்தூரர் வளாகத்தில் சிலையை வைக்க அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். சிலையின் உயரமும் அதிகம் என்பதால் சாலையில் சிலையை வைத்தால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதையும் அதிகாரிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

இதையடுத்துதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓமந்தூரார் வளாகத்தில் கருணாநிதி சிலை திறக்கப்படும் என அறிவித்தார். “நீண்ட தூரம் இந்த தமிழினத்துக்காக ஓடியவர் கலைஞர் அவர்கள். அவரை அதிக உயரத்தில் உயர்த்திப் பார்ப்பதைத் தனது கடமையாகக் கருதுகிறது தமிழ்நாடு அரசு” என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் (16 அடி) அமைக்கப்பட்ட சிலையை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார்.