திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. வீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் கருணாநிதி இல்லமான கோபாலபுரத்துக்கு விரைந்து ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இதனையடுத்து இன்று பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஸ்டாலினை தொடர்புக் கொண்டு கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கருணாநிதியின் காய்ச்சல், நோய்த் தொற்று நன்றாக குறைந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.