தமிழ்நாடு

கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை அறிக்கை

கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை அறிக்கை

rajakannan

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால் இருப்பதாகவும் நேற்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், அடுத்த 24 மணி நேரம் அவரது உடல்நிலையை கண்காணித்துதான் அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும் என்றும் கூறப்பட்டது. 

இதனிடையே, முதலமைச்சர் பழனிசாமியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்தனர். சுமார் 20 நிமிடங்கள் சந்திப்பு நீடித்தது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து முதல்வரிடம் பேசியதாக தெரிகிறது. இந்தச் சந்திப்பின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்புக்கு பின்னர், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். காவேரி மருத்துவமனையில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை மாலை 4.30 மணிக்கு அறிக்கை வெளியிட்டது. அதில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ உதவிகள் செய்தும் அவரது உறுப்புகளை செயல்பட வைப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியான அறிக்கையில், “கருணாநிதியின் வயது காரணமாக அவரது முக்கிய உறுப்புகளை சீராக வைத்திருப்பதில் சவாலாக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மேலும், மருத்துவ உதவியும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல் நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை அடுத்த 24 மணி நேரம் கண்காணிக்க வேண்டியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது வெளியாகியுள்ள அறிக்கையிலும் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.