கருணாநிதி நினைவிடத்தில் கொட்டும் மழையில் ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். நேற்று ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திமுகவினர், அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் புடைசூழ இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதியில், நேற்று மாலை 7 மணியளவில் கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இன்று காலை கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். திமுக தொண்டர்கள் மட்டும் இன்றி பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்த அண்ணா நினைவிடத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், மெரினாவில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஸ்டாலின், அழகிரி, தமிழரசு, கனிமொழி, ராஜாத்தி அம்மாள், உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது, மெரினா பகுதியில் மழை பெய்தது. மழையில் நனைந்தவாறே கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.