மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக ராஜ்யசபா சீட்டு வழங்கியதை வைத்து, விஜய்க்கும் திமுக சீட்டு வழங்கும் என்று கரு.பழனியப்பன் சூசகமாக விமர்சித்து பேசியிருக்கிறார்..
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில் "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்", "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தீர்மான ஏற்பு கூட்டம் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
திமுக தலைமை கழக பேச்சாளரும் திரைப்பட இயக்குநருமான கரு.பழனியப்பன் பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 5 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்றைக்கு வந்த விஜய் இந்தியை எதிர்த்துதான் அரசியல் செய்கிறார். அதைத்தான் நாங்களும் செய்கிறோம் எங்களுடன் வந்து நிற்க வேண்டியதுதானே..?
புது ஐட்டம் விற்றால் தானே தனிக்கடை போட வேண்டும்.. நான் எந்த மேடையிலும் விஜயை விமர்சிப்பது கிடையாது.. ஏனென்றால் நாம்தான் விஜய்க்கு அடுத்த முறை ராஜ்யசபா சீட்டு கொடுக்க வேண்டும், ஏனென்றால் திமுகவிற்கு அவர் வந்து விடுவார் என பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், இன்றைக்கு இருக்கக்கூடிய நடிகர்கள் கமலஹாசனை போல யாரும் இருக்க முடியாது. அவருக்கும் ஆசை இருந்தது. கட்சி தொடங்கினார் முடியவில்லை, பின்பு கமலுக்கு திமுக ராஜ்யசபா சீட்டு வழங்கியது, இதை தான் வைத்து கரு.பழனியப்பன் சூசகமாக சொல்கிறார் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
பின்பு ஒரணியில் தமிழ்நாடு உறுதிமொழியை அமைச்சர் பெரியகருப்பன், வாசிக்க கரு.பழனியப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏற்றனர்.