தேடப்படும் நபராக அறிவிக்க, தான் என்ன தீவிரவாதியா என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஸ்போர்ட் சட்டப்பிரிவின் கீழ் கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அந்நிய செலாவணி மோசடி வழக்குகளில் அவர் மீது புகார்கள் உள்ள நிலையில், வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தன் மீதான லுக் அவுட் சர்க்குலரை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், உள்துறை அமைச்சகத்திடம் இதுதொடர்பாக விளக்கம் பெற்று தர மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து வழக்கு 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேடப்படும் நபராக அறிவிக்க தான் என்ன தீவிரவாதியா என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சொந்த ஊரான காரைக்குடியில்தான் இருப்பதாக கூறியுள்ள அவர், தமிழகத்தை விட்டு எங்கும் செல்லவில்லை என்பது போன்ற படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் வகையிலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.