கன்னியாகுமரியில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தாய் மீது தோழிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரெத்தினசாமி - சார்லெட்பாய். இவர்களது இரண்டாவது மகள் அனுஷியா (18). 12ஆம் வகுப்பு வரை படித்த இவர், அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி வீட்டில் விஷம் அருந்திய நிலையில் மீட்கப்பட்ட இவர், சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் 25ஆம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அனுஷியாவின் தாய் இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அந்தப் புகாரில், பியூட்டி பார்லரில் வேலை பார்க்கும் தனது மகள் அனுஷியா கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்த 2000 ரூபாயை திருடி விட்டதாகவும், அதற்காக சத்தம் போட்டதால் எலி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்த போலீஸார், உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அனுஷியாவின் மரணம் தற்கொலை இல்லை என்றும், கொலை செய்யப்பட்டு விட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் அவரது தோழிகள் பதிவிட்டுள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோழிகள் கூறும் குற்றச்சாட்டுகளில், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தாயாரால் சூடுகள் போடப்பட்டு பல சித்திரவதைகளுக்கு அனுஷியா ஆளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களிடம் ஒருபோதும் அனுஷியா சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டதில்லை என்றும் அந்த பதிவுகளில் அவர்கள் கூறியுள்ளனர். அண்மைக்காலமாக அனுஷியா வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதற்கு அவரது தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வீட்டு சிறையில் அறையில் அடைத்து வைத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவரது தற்கொலையில் மர்மம் உள்ளது என்றும், போலீசார் விசாரித்து பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தோழிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கிடையே தற்கொலைக்கு முன் தனது காதலன் சுனிலுடன் அனுஷியா செல்போனில் பேசிய உருக்கமான ஆடியோவும் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
அதில் தான் தற்கொலை செய்து கொண்டால், அதற்கு காரணம் தனது தாய் தந்தை என்றும் அனுஷியா கூறியிருக்கிறார். தனது தாயார் தன்னிடம் பேசும் போதெல்லாம் ‘செத்து போ’ என்று கூறுவதாகவும், அறையில் அடைத்து வைத்து சித்தரவதை படுத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாகவும், தான் தற்கொலை செய்து கொண்டால் ‘நீ என்ன செய்வாய்’ என காதலனிடம் உருக்கமாக கேட்டிருக்கிறார்.
சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)