பீகார் தேர்தல் முடிவுகள் ஒருபுறம் விவாதத்தை கிளப்பியிருக்க, மறுபுறம் தமிழ்நாடு தேர்தல் பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லை. மாநிலத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில், யாரும் எதிர்பாராத கோணத்தில் இருந்து சூடுபிடித்திருக்கிறது தேர்தல் பரபரப்பு.
தமிழகத்தில் பிற மாவட்டங்களைப் போல, கன்னியாகுமரியிலும் 2026 தேர்தலை எதிர்கொள்வதற்கான முனைப்புகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மூழ்கியுள்ளன. இப்படியான சூழலில்தான், கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் பரபரப்புக்கான நெருப்பை பற்றவைத்தார் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ். அதாவது, 7-11-2025 அன்று கன்னியாகுமரியில் அமைந்துள்ள காமராஜர் மணிமண்டபத்தில், கறுப்புச் சட்டை அணிந்து ‘காமராஜர் வீடு எரிக்கப்பட்ட தினத்தை நினைவுகூர்ந்து’ உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
அப்போது பேசிய மனோ தங்கராஜ், “பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்தார் என்ற காரணத்துக்காக, அன்றைய பாரதிய ஜன சங்கமும், ஆர். எஸ். எஸ் அமைப்பும் சேர்ந்து 1966, நவம்பர் 7-ம் தேதி டெல்லியிலுள்ள காமராஜர் வீட்டை எரித்து, அவரைக் கொலைசெய்ய முயன்றார்கள். அந்நிகழ்வை நினைவு கூறும் நாளாக இன்று காமராஜர் மணிமண்டபத்தில் உறுதியேற்பு நிகழ்வு நடத்தியிருக்கிறோம். எந்தச் சூழலிலும் இந்த மதவாதக் கும்பலைத் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த விட மாட்டோம். அதற்காக முழு முயற்சியில் போராடுவோம்” என்று காட்டமாகப் பேசினார்.
மனோ தங்கராஜின் இந்தப் பேச்சால் கொந்தளித்தார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். உடனடியாக அடுத்த நாளே செய்தியாளர்களை சந்தித்த அவர், 'கனிம வளக் கடத்தலில் மலைமுழுங்கி மகாதேவன் மனோ தங்கராஜ்' என விமர்சித்தார்.
"காமராஜர் மணிமண்டபத்தில் கருப்பு சட்டை போட்டு அவமதித்த அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் முதலமைச்சர் மன்னிப்பு கேட்ட வேண்டும். காமராஜர் குறித்து ஆர்.எஸ்.எஸ், ஜன சங்கம் மீது அவதூறு பரப்புகிறார். அப்படி அமைச்சர் சொல்வது உண்மை என்றால் கலைஞர் ஏன் எங்களோடு கூட்டணி வைத்தார்" என கேள்வி எழுப்பி பரபரப்பு பேட்டி அளித்தார். மேலும் பேசிய அவர், 'காளிமலையில், மதக்கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார் மனோ தங்கராஜ். அதன் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட வேண்டும்' என்றார்.
பொன் ராதாகிருஷ்ணனுக்கு அடுத்த நாள் பதிலடி கொடுத்தார் மனோ தங்கராஜ். '1966இல் டெல்லியில் காமராஜர் வீட்டைக் கொளுத்தியதை பாஜகவினர் மறுக்க முடியுமா?' என சவால் விட்டார். "பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயற்சித்ததும், அவரது வீட்டை கொளுத்தியதும் நாங்க தான்' என்று பாஜ, ஆர்.எஸ்.எஸ். உண்மையை ஒத்துக்கொள்ள பயப்படுவது ஏன்? இவர்கள்தான் காமராஜர் வீட்டை கொளுத்தினார்கள்" என மீண்டும் அழுத்தமாக தெரிவித்தார். அந்த செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார் மற்றும் பிரின்ஸ் உடனிருந்து ஆதரவு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “கடந்த அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சியில்தான் கன்னியாகுமரியில் அதிக எண்ணிக்கையில் குவாரிகள் அமைக்கப்பட்டன. 46 குவாரிகள் இருந்ததை 3 ஆக மாற்றி இருக்கிறோம்" என தெரிவித்தார். தன் மீது அவதூறு பரப்புவோர் மீது வழக்கு தொடரப்படும் என அழுத்தமாக மீண்டும் தெரிவித்தார்.
அமைச்சரின் பேச்சை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போதும் மதம் சார்ந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் மீது சுமர்த்தினார் பொன் ராதாகிருஷ்ணன்.
இந்நாள் தமிழக அமைச்சர் - முன்னாள் மத்திய இணை அமைச்சர் இடையிலான மோதலால், கொதிநிலையிலேயே இருக்கிறது தென்கோடி மாவட்ட அரசியல். வரும் தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டத்தில், காமராஜரும் கனிமவளமும்தான் ஹாட் டாபிக்காக இருக்கலாம்.