கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் முழுமையாக சீராகவில்லை. எனவே அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல், அம்மாவட்ட மக்கள் தவித்து வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான ஒகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தையை புரட்டி போட்டுள்ளது. புயல் கன்னியாகுமரியை விட்டு விலகிச் சென்றிருந்தாலும் கூட இன்னும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனிடையே புயலின் தாக்கத்தால் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மக்கள் உண்பதற்கு உணவு இல்லை. குடிநீரும் இல்லை. மாவட்டம் முழுவதும் மின்சாரமும் இல்லை. எனவே குழந்தைகள் வைத்திருப்பவர்கள், முதியோர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தர மக்களும் அவதியுற்று வருகின்றனர்.
பல குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். இதனால் ஏராளமான குடும்பத்தினர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஏடிஎம்களும் செயல்படவில்லை. 60 சதவித இடங்களில் இன்று மாலைக்குள் மின்சாரம் சீராகும் என்று சொல்லப்பட்டிருந்தாலும் கூட, முறிந்து விழுந்துள்ள நூற்றுக்கணக்கான மரங்களை அகற்றும் பணி இன்னும்
தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் வீழ்ந்துள்ளதால் அவற்றை சீரமைத்து மின்விநியோகம் செய்யும் நடவடிக்கைகளில் 2,000-க்கும் அதிகமான மின்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, ஆர்.பிஉதயகுமார் ஆகியோரும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.