தமிழ்நாடு

திருமண நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு உணவு அளிக்க தடை - கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம்

திருமண நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு உணவு அளிக்க தடை - கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம்

Sinekadhara

திருமண நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு உணவு அளிக்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை குமரி மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளை மாவட்டத்தில் அதிகமான மக்கள் கடைபிடிக்கவில்லை. குறிப்பாக திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை என கூறியும் மாவட்டத்தில் அதிகமான திருமண நிகழ்ச்சிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் பங்கேற்று வருகின்றனர். திருமணங்களை திருமண மண்டபங்களில் வைத்து நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையிலும் பல்வேறு இந்து, கிறித்தவ கோயில்களில் உள்ள சமூக நலக்கூடங்களில் வைத்து நடத்தி வருகின்றனர்.

அதேபோல் திருமணத்தின் ஒரு நிகழ்வான மணமகன் வீட்டுக்கு மணமகள் வீட்டார் செல்லும் நிகழ்ச்சிக்கும் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களில் செல்வது, அங்கும் கூட்டம் கூடுவது என பல விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். திருமண நிகழ்ச்சிகளிலேயே பல்வேறு கட்டுப்பாடுகளை மக்கள் அதிகமாக மீறிவரும் நிலையில் நாளை முதல் மாவட்டத்தில் திருமணம் மற்றும் அதுசார்ந்த நிகழ்ச்சிகளில் உணவு விருந்து நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். மேலும் 50 பேர்களுக்கு மிகாமல் திருமண சடங்குகளை நடத்திமுடிக்கவேண்டும் எனவும் ஆட்சித் தலைவர் அரவிந்த் அறிவித்துள்ளார்.