தமிழ்நாடு

காணும் பொங்கல்: மாட்டு வண்டியில் வீதிஉலா வந்த திருத்தணி முருகப்பெருமான்!

webteam

காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலின் உற்சவர் மாட்டு வண்டியில் நகரம் முழுவதும் வீதி உலா வந்தார். பக்தர்கள் வாசலில் கோலமிட்டு உற்சாகமாக வரவேற்று பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காணும் பொங்கல் விழாவை ஓட்டி, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை, 6:00 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக, சன்னதி தெருவிற்கு புறப்பட்டார். இதையடுத்து சன்னிதி தெருவில் உள்ள கோவில் ஆணையர் குடியிருப்பு முன், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவ பெருமான் எழுந்தருளினார்.

அதனைத் தொடர்ந்து அங்கு உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திருத்தணி சுமைதாரர்கள் மாட்டு வண்டியில் உற்சவ பெருமானை, நகரம் முழுவதும் உள்ள வீதிகளில் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து பழைய பஜார் தெரு அருகில் உள்ள ரெட்டிகுளம் மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதையடுத்து உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக் கோவிலை சென்றடைந்தார்.

உற்சவர் முருகப்பெருமான் திருவீதி உலாவை ஒட்டி திருத்தணி நகர பெண்கள் தெருக்களில் வண்ணக்கோலங்கள் போட்டு, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி கோயில் சுமைதாரர்கள் செய்திருந்தனர்.