Kannagi Nagar
Kannagi Nagar PT Desk
தமிழ்நாடு

‘குழந்தைகளை வைத்துக்கொண்டு.. தினம் தினம் பயந்து வாழ முடியாது’ - கண்ணகி நகர் குடியிருப்புவாசிகள்

PT WEB

கண்ணகி நகர், முதல் பிரதான சாலையில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1.25 கோடி ரூபாய் செலவில் நிதி ஒதுக்கீடு செய்து நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சமூக நலக்கூடம் கட்டும் பணி 4 மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக, கண்ணகி நகர் முதல் பிரதான சாலையில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அருகில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்ட மூன்றடுக்கு அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் 36 வீடுகள் உள்ளன.

சமூகநலகூடத்துக்குத் தோண்டப்பட்ட பள்ளத்தின்போது, அருகில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் கடைக்கால் தூண்கள் தெரியும் அளவுக்குத் தோண்டியதால் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழும் நிலை உள்ளது. வீடுகளுக்குள்ளும் விரிசல் விட்டுள்ளது.

கண்ணகி நகர்

இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, கட்டுமானத்துக்கு உரிய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். இந்நிலையில், புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் சிவசங்கரன் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் கண்ணகி நகரில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரரிடம் ஆலோசனையும் மேற்கொண்டார். இதுகுறித்து தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் கேட்டபோது, இதுகுறித்து ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் கூறும்போது, “தோண்டிய பள்ளத்தை கான்கிரீட் தளம் மாதிரி அமைத்து தரவேண்டும். இல்லையென்றால் குழந்தைகளை வைத்துக்கொண்டு அச்சத்தோடு தினம் தினம் வாழ முடியாது” என்று தெரிவித்துள்ளனர். மேலும், முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.